
ஜானுவிற்க்கு ஸ்ரீராமின் மறைவு கொஞ்சம் நிம்மதியை தந்தது,
தேசத்திற்கே தலைவனாக இருந்தாலும் குடும்பத்தலைவனாக அவன் சராசரி மனிதனாகவே நடந்து கொண்டான்.
நிறைய கேள்விகளும்,சந்தேகங்களும் ஜானுவை நோக்கி அவனிடம் இருந்து கொண்டே இருந்தது. நிரூபிக்க முடியாமல் ஜானுவிடம் பொருமிக்கொண்டே இருந்தான் இறுதிவரை.
இரட்டை பிள்ளைகள் அழகாய் பிறந்ததும் அவனது வசை சொற்களும்,கண்ணீர் பீறிட்ட கோபமும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே சென்றது.
டி.என்.ஏ சோதனை வரை ஜானுவை உட்படுத்த தயாராய் இருந்தான்,
முக்கிய மந்திரி ஆஞ்சநேயர் “இது பிரதம குடும்ப பிரச்சினை, நாளை வெளியில் தெரிந்தால் எதிர் கட்சியினரின் வெறும் வாயில் அவுளைத் திணித்த கதையாகிவிடும்..எனவே வேண்டாம் வீனாக ஜானகி அம்மாவை சந்தேகப்படாதீர்கள்” என சொல்லி சமாதான படுத்தி சோதனையை தடுத்தார்.
தங்களது சண்டையால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்க கூடாது,முக்கியமாக தந்தை மீது அவர்களுக்கு வெறுப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக, லவனையும் குசானையும் படிப்பை காரணம்காட்டி சிறு வயதிலேயே வெளிநாட்டிற்க்கு அனுப்பி வைத்தாள் ஜானு.
தங்கள் குடும்ப பிரச்சனைகள் எதுவும் தெரியாமல் ராஜகுடும்பத்து வாரிசுகள் சுகமாய் சுதந்திரமாய் படித்து வளர்ந்தனர்.ஜானு மட்டும் அவ்வபோது சென்று பார்த்து வந்தாள்.ஸ்ரீராமை பற்றி விசாரித்தால் “உங்கள் அப்பா தேசத்தின் தலைவன் அல்லவா.. ஆகவே நேரம் இல்லை அவருக்கு, விரைவில் வந்து உங்களை பார்ப்பார்”எனக் கூறி சமாளித்து வந்தாள் ஜானு.
பிள்ளைகள் வளர வளர தந்தையின் பாராமுகம் பற்றிய கேள்விகள் ஜானுவிற்க்கு மிகுந்த சிரமத்தை கொடுத்தது.அந்நாட்கள் அவளுக்கு அக்னி கங்குகளை கடப்பது போன்று இருந்தது.
பொறுமையிழந்து லவனும் குசானும் ஒரு நாள் நேராக புறப்பட்டு வந்து வீட்டில் நின்றார்கள்.
மகிழ்ச்சியாய் தந்தை வரவேற்ப்பார், நாம்.. ஏன் இவ்வளவு நாள் எங்களை பார்க்க வரவில்லை என செல்லமாக கோவித்து உரையாடலாம் என நினைத்தவர்களுக்கு ஸ்ரீராமின் செயல் இடியாய் இறங்கியது.
தன் முன் நின்றவர்களை நன்றாக உற்றுப்பார்த்தான் ஸ்ரீராம்,கண் காது மூக்கு என தனித்தனியாக கவனமாக பார்த்தான்,
முகம் கடுமையாக மாறிக்கொண்டே இருந்தது,முகம் சிவந்து ,கண்ணீர் பெருகி, பற்களை கடித்து..
“இல்லை..இல்லை..”என கலங்கிபோய் கத்தினான்,செய்வதறியாது திகைத்து நின்ற ஜானுவைப் பார்த்து “இன்னுமா..என்னை நம்ப சொல்கிறாய்.. சண்டாளி..” என கதறியவாறு ஓடிச்சென்று தன் அறைக்குள் தாளிட்டுக் கொண்டான்.
லவனும் குசானும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.முக்கிய மந்திரி ஆஞ்சனேயர் ஸ்ரீராமின் பின் சென்று சில நிமிடங்கள் கதவினை தட்டிப் பார்த்து திறக்காததால் விட்டு விட்டார்.
நாட்டில் உள்ள பிரச்சினைகளின் அழுத்தம் தாங்காமல் ஸ்ரீராமிர்க்கு ஒரு வித மன நோய் பீடித்திருக்கிறது, இது வெளியில் யாருக்கும் தெரியாது என அமைச்சர் ஆஞ்சனேயனும்,ஜானுவும் பிள்ளைகளிடம் சொல்லி சமாளித்தனர்.
லவனும் குசானும் தன் தந்தையின் நோய் பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் தீவிரமாக கணினி வலையில் தேட ஆரம்பித்தார்கள்.
ஸ்ரீராம் பூட்டிய அறையை திறப்பதாய் இல்லை,இரண்டு நாட்களாயிற்று ,மந்திரி ஆஞ்சனேயர் கட்சியினரை ஏதேதொ சொல்லி சமாளிக்க வேண்டியதாயிற்று. பிள்ளைகளோடு ஓய்வாக இருக்கிறார்,உடம்பு சரியில்லை ஜுரம் என்று.

மூன்றாவது நாள் ஸ்ரீராமின் அறையில் துற்நாற்றம் வீசவே கதவினை உடைத்து ஆஞ்சனேயர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.ஸ்ரீராம் உத்திரதில் தொங்கி கொண்டு இருந்தான்.
ஜானுவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் அவனை கீழிறக்கி, “மாரடைப்பில் பிரதமமந்திரி இறந்தார்” என்ற செய்தியை உலகிற்கு அறிவித்தார் அமைச்சர்.
ஊடகங்கள் மூச்சுவிட கூட நேரம் விடாமல் செய்தியை ஒளிபரப்பிக்கொண்டிருந்தன.உலகத் தலைவர்கள் இரங்கல் செய்திகளை தெரிவித்தனர்.எதிர்கட்சியினர் கூட “ நாடு ஒரு ஈடில்லா நல்ல மனிதனை இழந்துவிட்டது”என புளுகினார்கள்.
ஊடங்கள் அனைத்தும் வயலின் வாசித்தபடி இறுதி ஊர்வலத்தை நடத்தின.இளைய மகன் குசான் தீ மூட்டி இறுதி சடங்கு செய்ய,அதுவரை ஜானுவின் மனதில் அனலைக் கக்கி கொண்டிருந்த ஜூவாலை மெல்ல தணிந்தது.
எதிர் பார்த்தபடி ஆஞ்சனேயர் பிரதமராக பொறுப்பேற்று பொறுப்பாக கட்சியை பார்த்துக் கொண்டார்.ஜானு கட்சி தலைவியாக தலைமையை நிர்வகித்தாள்.சில நாட்கள் ஜானுவுடன் இருந்த லவனும் குசானும் விடைபெற்று படிப்பை தொடர வெளிநாடு சென்றனர்.
ஜானுவிற்க்கு ஸ்ரீராமின் மறைவு சற்று நிம்மதியை தந்தது.
வருடங்கள் கடந்து லவனும் குசானும் வாலிப வயதை அடந்தனர்.அவ்வயதிற்கான சந்தோஷங்கள் தந்தையை மறக்க செய்திருந்தது.
லசேனா எனும் பேரழகி லவனுக்கு கிடைத்திருந்தாள்,காதல் வளர்த்து கசிந்துருகி கொண்டிருந்தனர் இருவரும்.அவள் எந்த விதத்திலும் இவர்கட்கு தகுதியில் குறைந்தவள் இல்லை.
ஆனால் அவர்களது காதல் இணைவது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.அது இரண்டு தலைமுறை பகை.இரண்டு நாட்டின் பகை,இரண்டு வம்சத்தின் வன்மம் என நிறைய சிக்கலை கொண்டதாகும்.
அவள் அண்டைய நாட்டின் முன்னால் அதிபர் ராவனின் மூன்றாவது மனைவியின் மகள்.
இரு நாட்டிற்கிடயே சில வருடங்களுக்கு முன் நடந்த போரில், ராவன் மற்றும் அவனது ஆண் வாரிசுகள் அனைவரும் கொல்லப்பட்டனர் ஸ்ரீராமின் கட்டளையின் பேரில்.ஆகவே இவர்களது காதல் இரு நாட்டின் பிரச்சனை.
இருப்பினும் காதல் அவர்களை கண்மூடித்தனமாக நம்ப வைத்தது,பிரச்சனைகளை தீர்த்துவிடலாமென.குசானும் அவர்களுக்கு தைரியம் சொன்னான் தான் அம்மாவிடம் பேசுவதாக.
தாமதிக்காமல் இருவரும் புறப்பட்டு வந்து ஜானுவிடம் பேசினார்கள்.மகன் காதல் வயப்பட்டுள்ளான் என்ற ஆரம்பசெய்தி அவளுக்கு புன்முறுவலோடு மகிழ்ச்சியை தந்தது.
லசேனா பற்றி குசான் கூற ஆரம்பித்தான் “அம்மா அவளும் ஒரு நாட்டின் பிரதம குடும்பத்தை சேர்ந்தவள்தான், அழகிலும் அண்ணனுக்கு இணையானவள்”.என மறைமுகமாக சொல்லிக்கொண்டே இருந்தான்.
“எதிலும் குறைந்தவளில்லை எனக் கூறிவிட்டாய் பிறகென்ன ..எந்த நாட்டை சேர்ந்தவள் ..யாருடைய பெண் என்று சொல், ஆஞ்சனேய மாமாவை பேசச்சொல்வோம்” என ஜானு குசானிடம் கேட்டாள்.
குசான் சற்று தயங்கி “ நம் அண்டை நாட்டின் முன்னால் அதிபர் ராவனின் மகள் அம்மா.. லசேனா” எனக் கூற,ஜானு அதிர்ந்து எழுந்தாள்.
“என்ன சொல்கிறாய் நீ.. இது எப்படி சரி வரும் என்று பேசுகிறாய்.. நடந்தவையெல்லாம் தெரியும் அல்லவா உனக்கும் ,உன் அண்னனுக்கும்.அவளுக்கும் இது தெரிந்திருக்குமே.சிறுபிள்ளைகள் என்பது சரியாகத்தான் இருக்கிறது.இது ஒரு போதும் நடக்காது.இவ்விசயத்தை மறந்து விடுங்கள்.”எனக் கூறி சட்டென எழுந்து சென்றாள்.ஏதோ பதில் கூற முற்பட்டவன் முடியாமல் நின்றான்.
லவனுக்கு சோகம் அப்பியது, நிலைகுழைந்து கண்கள் நிலை குத்தி அறைக்குள் அடைந்தான்.குசான் அண்ணனின் காதலையும் அம்மாவின் பதிலையும் பிரதம மந்திரி ஆஞ்சனேயரிம் கூறி உதவும்மாறு வேண்டினான். நீண்ட நேர சிந்தனைக்கு பின் ஆஞ்சனேயர் ஜானுவிடம் பேச வந்தார்.
ஜானு “ என்ன பேசுகிறீர்கள் அண்ணா நீங்களுமா..?”என கடுமையாக மறுத்தாள்.
ஆஞ்சனேயர் “ ஜானகி அம்மா.., நன்றாக யோசித்துப் பாருங்கள்.,இது நமக்கு ஒரு வாய்ப்பு.இரு நாடுகளுகிடயே இருக்கும் பனி போரை தனிக்கலாம்,ஸ்ரீராம் அய்யா தொடுத்த போருக்கு ஐ.நா.வின் குற்றவாளி கூண்டில் நாம் இன்னும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.சற்று நேரம் சிந்தியுங்கள் அனைத்து பிரச்சினைக்கும் இது ஒரு தீர்வு. நாம் போரில் செய்த பாவத்திற்கு பிராயசித்தம்.”
ஜானு முறைத்தவாறு “ நன்கு தேறிய அரசியல்வாதி ஆகிவிட்டீர்கள் அண்ணா..இதுபற்றி இனி மேல் என்னிடம் பேசாதீர்கள்.. வெளியே போங்கள் இங்கிருந்து..” என திருத்தமாக கூறினாள், வேறுவழியின்றி ஆஞ்சனேயர் வெளியேறினார்,வாசலில் காத்து கொண்டிருந்த லவனிடமும் குசானிடமும் உதட்டை பிதுக்கி இயலாமையை சொல்லிவிட்டு நகர்ந்தார்.
லவனுக்கு மனதிற்குள் காதல் பிசைந்தது, லசேராவின் ‘என்ன ஆயிற்று” “அம்மா சம்மதித்துவிட்டார்களா” போன்ற குறுஞ்செய்திகளுக்கும் மின் அஞ்சல்களுக்கும் பதில் தெரியாது தலையை பிய்த்து கொண்டான்.ஜானுவின் மேல் கோபம் பீறிட்டு வந்தது.அறைக்கு சென்று கட கடவென நான்கு “பீர்” புட்டிகளை காலி செய்தான்.அழுகை திமிரிக்கொண்டு வந்தது.போதையோடு ,தன் அம்மாவின் அறைக்கு நேரே சென்றான்.
ஜானுவை நேருக்கு நேர் கை நீட்டி போதையில் குழறிய நாக்கிலிருந்து வார்த்தைகளை கொட்டினான் “ நீயெல்லாம் ஒரு தாயா..பிள்ளையோட மனச புரிஞ்சுக்க தெரியல.. சீ.. ராஜ வம்சமா.. மரியாதையாம்..யாருக்கு வேணும் இதெல்லாம்.. போட்டி,பகைனு கடைசில என்ன கொண்டு போகப்போறீங்க..எல்லோரும் சாகப்போறோம்..எல்லோரும் சாகப்போறோம்..”என வாயில் வந்த தத்துவங்களையெல்லாம் வாந்தி எடுத்துவிட்டு மயங்கி விழுந்தான்.
அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஜானு வெடித்து அழ ஆரம்பித்தாள்.வாழ்க்கையில் அவள் அழுவது இதுவே முதல்முறை,ஆனால் வாழ்க்கையின் மொத்தத்திற்கும் அழுகை அடங்க மறுத்து மனதினை பிளந்து கொண்டு வந்தது.மயங்கி கிடக்கும் லவனை உற்றுப் பார்த்து “மன்னித்துவிடு மகனே ..”என வார்த்தையை உதிர்த்தாள்.
மேஜையை திறந்து காகிதத்தை எடுத்து லவனுக்கு எழுதினாள்.
“மகனே லவன்.., எனக்கு உன் வேதனை புரிகிறது,ஒரு தாயாக நான் துடித்து கொண்டுதான் இருக்கிறேன்.ஆனால் என் மறுப்புக்கு காரணம் நான் யாரிடமும் கூற முடியாது,இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு பெரும் ரகசியம் இருக்கிறது.இதனை இதுவரை நான் ரகசியமாக வைத்திருந்ததால்தான் நான் உயிரோடு இருந்தேன்.ஆனால் இனியும் ரகசியம் காக்க முடியும் என்ற நம்பிக்கையில்லை.பல ஆண்டுகளுக்கு முன் உன் அப்பா ஸ்ரீராம் அண்டை நாட்டோடு போரிட்டு அழித்தாரே ,அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா உனக்கு.உலகத்திற்க்கு வேண்டுமானால் அது மக்களுக்கான போர்,மண்ணை காக்க புரிந்த போர் என இருக்கலாம்.ஆனால் உண்மை அதுவல்ல.

போர் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன் நான் அந்த நாட்டிற்க்கு அரசியல் விருந்தினராக சென்றிருந்தேன்,அந்நாட்டின் அதிபர் ராவன் சிறப்பாக உபசரித்து விருந்தோம்பல் செய்தார்,அங்கிருந்த இரண்டு நாட்களில்,ராவன் பற்றி நிறைய தெரிய வந்தது.அவர் ஒரு மிகப்பெரிய வீரன்,ஆளுமையில் சிறந்தவன்,புத்தி கூர்மையுடன் ஆட்சி புரிபவன்.அன்பினை மழையாய் மக்களுக்கு பொழிபவன் என அவனை பற்றிய சிறப்புகள் யாரும் சொல்லாமலேயே எனக்கு புரிந்து ஈர்த்தது.அவன் ஒருவன் பத்து பேருக்கு சமமானவன் , திறமையும் தன்மையும் அவனிடம் நிறையவே இருந்தது.பல பெண்களின் கனவு நாயகனாக இருந்தான்,அப்பெண்களில் நானும் ஒருத்தியாய் என்னை அறியாமல் மாறிப்போனேன். ‘பத்து தலை தலைவன்” என்ற பெயருக்கு அவன் சரியாக பொருந்தினான்.அவன் சிறந்த இசை ஞானம் உடையவன்.எனக்கும் இசை என்றால் சிறு வயதிலிருந்தே உயிர்.
ஆனால் திருமணத்திற்க்கு பின்னால் என் இசை ஆர்வம் முடக்கப்பட்டு கிடந்தேன்.அவன் வீணை மீட்டும் அழகில் நான் சொக்கிப்போய் ஒருவித ஈர்ப்பு கொண்டேன், இரண்டு நாட்கள் விருந்தினராய் சென்றவள் எனக்கே தேரியாமல் சில நாட்கள் கிரங்கி அங்கேயே தங்கிவிட்டேன்.அவன் மீட்டும் வீணையின் நரம்பு,எனக்குள் அதிர்ந்து சுகமான ராகத்தையும் இன்பத்தையும் கொடுத்தது.
நான் திரும்பாததால் ஆத்திரம் அடைந்த என் கணவர், அங்கு நேராக வந்து கத்தியதும்தான் எனக்கு கிரக்கம் கலைந்தது.அன்று என்னை நோக்கி வசை சொற்களை வீசியவர் கடைசிவரை நிறுத்தவில்லை.என் சுயநினைவை இழந்து நான் இருந்ததுதான் வாழ்க்கையில் நான் செய்த பெருங்குற்றம்.என் மீதுள்ள கோபம் என் கணவரை அந்நாட்டின் மீது ஏதோ அரசியல் காரணங்கள் கூறி அழிக்க வைத்தது.
இதுவரை எனக்குள் புதைந்திருந்த இந்த ரகசியத்தின் காரணமாகவே என்னால் உன் காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஏனென்றால் உன் உன்மையான பெயர் “லவன் ஸ்ரீராம்” இல்லை மகனே “லவன் ராவன்” என்பதாகும்.
எழுதி முடித்து பேனாவின் முனையை முற்றுப்புள்ளியாய் பதித்திருந்தாள்.தூக்க மாத்திரை புட்டி காகிதத்தை பறக்காமல் பாதுகாக்க.,ஜானு அசையா உருவமாக சாய்ந்தாள்.
காலையில் போதை தெளிந்து கண்விழித்த லவன் கடிதத்தை வாசித்தான்
கடித வார்த்தைகளுக்கு இடையில் ஸ்ரீராமின் கடைசி வார்த்தைகள் அவனுக்கு கேட்டது
“இல்லை..இல்லை..”
“இன்னுமா..என்னை நம்ப சொல்கிறாய்.. சண்டாளி..” என ஸ்ரீராமின் குரல் கதறியது.
கலங்கிய கண்களுடனும் கனத்த நெஞ்சத்துடனும் கடிதத்தைப் படித்தவன், கண்ணாடி முன் சென்று பார்த்தான்,
கண்ணாடி பிம்பத்தில் பத்து தலைகள் தெரிந்தது.





